முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

பசி(த்)தவம்  

பசி(த்)தவம்

* வசந்தத்தின் பாதை

* விமர்சனம்

* பறிபோன இதயம்

* பறிபோன இதயம்

* எங்கள் சாமிகள்

கவிதை 16 - ஜெ. செண்பகராஜன்

கவிதை 17 - ஓவியர் கல்யாணசுந்தரம்

கவிதை 14 - டாக்டர் சாந்திலால்.

கவிதை 15 - எஸ்.ஆர்.கே. நந்தன்

கவிதை 13 .சமுத்திரம்.

கவிதை 12 - பா.முருகேசன்

கவிதை 11 - ஓவியர் கல்யாணசுந்தரம்

கவிதை 10 - இலக்கிய ராஜா

கவிதை 9 - கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி

கவிதை 8 - கனிமொழி கருப்பசாமி

கவிதை 7 - பாண்டூ

கவிதை 6 கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி

கவிதை 5 ஜெ. செண்பகராஜன்

கவிதை 4 ஜெ. செண்பகராஜன்

கவிதை 3 யுவபாரதி

கவிதை 2 யுவபாரதி

தமிழில் கவிதை படிக்க வாங்க





கொக்கின் ஊசிப் பார்வையில்
மீனின் மரண ஒளி அதிர்வு

மீனின் செதில் அசைவில்
நெட்டுயிர்த்து மீளும்
லாவக கவனப் புள்ளிநெளிவு

தவம் கலைக்க
மோகன நர்த்தனமிட்டு
சதைத் திமிரோடு சதிராடி
கெளுத்தி

தினமும் மரணவாசல் திறப்பாக
தின்று தீராப்பசி...
ஒற்றைக்காலில்
கொக்கின் தவம் நீள...

கானல் புகை கக்கி
வெடிப்புற்று
நீரலை மெளனித்து
சருகாகி குளம் - நிரப்ப
மழை வேண்டின்.



இலக்கிய ராஜா, சிவகாசி.

* வசந்தத்தின் பாதை  


வசந்தத்தின் பாதை
சுகமானதில்லை...
சுட்டெரிக்கும் வெயிலும்
பிரிந்து போகும் இலைகளும்
வாழ்வில் சுவைப்பதில்லை...
பின் துளிக்கும் துளிர்கள்
எல்லாமும் தரும்...
முதலில் நம்பிக்கை
பின்
பூ-காய்-கனி...
''விதைகளும்''

யுவபாரதி, சிவகாசி. இந்தியா.

செல்லிடப்பேசி +9198437 53894

வசந்தத்தின் பாதை

* விமர்சனம்  


கொஞ்ச நாளாக
எதையும் எழுத முடிவில்லை!

எதை எழுதினாலும்
நண்பர்கள்
கோபித்துக் கொள்கிறார்கள்!

பாராட்டினால்
புகழ்ச்சி என்கிறார்கள்!
குறை கூறினால்
வஞ்னை ஓர வஞ்சனை
என்கிறார்கள்!

இருந்தாலும் எழுதாமல்
ஒருபோதும் இருக்க முடியாது...

எழுத்தில் அவரவர் முகங்களும்
அகங்களும் அடையாளம் காண
நான் என்ன செய்ய முடியும்?
எழுதுவதைத் தவிர.
இலக்கியராஜா, சிவகாசி.செல்லிடபேசி:+91 94874 02736.

* பறிபோன இதயம்  


மழை தூவிய நேரம்
மொட்டை மாடிக்கு ஓடிவந்தாய்
கொடியில் காய்ந்திருந்த துணிகளை
அவசர அவசரமாய் எடுத்தாய்.
காய்ந்த துணிகளை சரி!
என் ஈரமான இதயத்தையும்
ஏனடி வாரி சுருட்டிக் கொண்டு போகிறாய்?


இன்பா (எ) ச. சிவானந்தம்
செய்தி ஆசிரியர், தீபம் தொலைக்காட்சி, புதுச்சேரி

* எங்கள் சாமிகள்  

கூட்டங்களைக் கண்டு விட்டால்
கும்பிடு போட்டு குத்தாட்டம் ஆடி
ஓட்டு கேட்கச் சொல்லும்
அரசியல்வாதிகளை!...

காற்றாடிகளுக்கு கீழே அமர்ந்து
கால் மேல் கால் போட்டு
கண்ணுறக்கம் பாதியாய்,
கையூட்டுப் பாதியாய்
கடைமை செய்யும்
அதிகாரிகளை !...

கொடுமைகளை கண்டு கண்டு
கொதித்தெழச் செய்யும்
தன்மான உணர்வாளன்களை!...

எல்லாமும் விதிப்படியென்று
எக்காலமும் ஏமாறும்
ஏழைத் தொழிலாளனை!...

இத்தனையும் கண்டு கண்டு
இருந்த இடத்திலேயே
"ஈ"யென்று இளித்துக் கொண்டிருக்கும்
எங்கள் "சாமிகள்".

ஆல. தமிழ்பித்தன்,
புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்.
செல்லிடப்பேசி +919345486839.

கவிதை 16 - ஜெ. செண்பகராஜன்  

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
சமூகத்தைச் சலவை செய்ய
ஒரு "சலவைக்கட்டி"


ஜெ. செண்பகராஜன்,
விருதுநகர்.
செல்லிப்பேசி: 9442094011.

கவிதை 17 - ஓவியர் கல்யாணசுந்தரம்  


வெட்டரிவாளும் வீச்சரிவாளும்
எட்டயபுரத்துப் பட்டயக் கவிஞனின்
மீசையைப் பார்த்த பின்தான்
வடிவமைக்கப்பட்டதெனச்
செவி வழிச் செய்தி....

கற்றவனுக்கு நூல் சொந்தம் என
இவன் செய்த கர்ஜனை "நூல்களுக்கும் "
இவனுக்கும் இடைவெளி நூறு காதம்...

முண்டாசுக் கவியின் பல அசைவுகள்
வெண்தாடி, கருஞ்சட்டை,
செவ்வங்கியை நோக்கியே
சென்றதால் பஞ்சகச்சங்கள்
பாய்ந்து பிராண்டியது, ஆறாவது
விரலின் பழமை நகத்தால்...

கடலில் உதிப்பவனே எதிர்த்தாலும்
காலில் உதித்தவனை தலையில் சுமப்பதே
சாபல்யம் எனமுரசெழுப்பிய அந்த வாளும்,
கேடயமும் எச்சங்களை
இறுதிவரை தீண்டவேயில்லை......

ஓவியர் கல்யாணசுந்தரம்,
சிவகாசி.
செல்லிடப்பேசி +91 99946 93182.

கவிதை 14 - டாக்டர் சாந்திலால்.  


அன்பு பாரதி! வாழிய நலம்!!


நீ நலமா? செல்லம்மா நலமா?


உன் அன்புக் குழந்தைகள் நலமா?


காக்கை குருவி கழுதை நலமா?


இங்கு யானை கோழி ஆடு நலம்...
தேர்தலுக்குத் தேர்தல் ஓரணியிலிருந்து மற்றொன்றுக்கு


வானரங்களாய்த் தாவும் கட்சிப்பிழைகள் நலம்...
ஆட்சி மாறியதும் அஞ்சி அஞ்சி


நீதிக்கூண்டில் கரணம் போடும் சாட்சிப் பிழைகள் நலம்...
இடிப்பபாரை யெல்லாம் ஏமரா மன்னன்


சிறைச்சாலை அனுப்பும் ஆட்சிப் பிழைகள் நலம்...


போலி பக்தர்கள் சுதேசிச் சாமியார்கள்


அரசியல் எத்தர்கள் தொலைக்காட்சிகப் பித்தர்கள் நலம்...
புள்ளிராஜாக்கள், கரும்புள்ளி மந்திரிகள்


மில்லி ராஜாக்கள் டாஸ்மார்க் கடைகள் நலம்...


சுருங்கக் கூறின் இங்கு...
அன்னைத் தமிழைத் தவிர அனைத்தும் நலம்...


அங்கு உன் நலமறிய ஆவல்...


இப்படிக்கு உன் அன்புத்தோழன்

டாக்டர் சாந்திலால். இராசபாளையம்.

தொலைபேசி: 04563 221883

கவிதை 15 - எஸ்.ஆர்.கே. நந்தன்  


ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம்
குழந்தைகளோடு வேடிக்கை பார்த்து
வாசலில் அமர்ந்திருப்பேன் நான்...
கடைக்குச் சென்று ஏதேனும்
வாங்கி வரச் சொல்லி
என் மெளனம் கலைப்பாய் நீ....
பரபரப்பான அலுவலகம் முடிந்து
அமைதியாய் வீடு திரும்புவேன் நான்...
மத்தியான உணவின் பக்குவம் கேட்டு
என் மெளனம் கலைப்பாய் நீ...
மாத இறுதி வெள்ளிக்கிழமையில்
ஆலயம் சென்று பிரகாரம் சுற்றி
முன் மண்டபம் அமர்வேன் நான்...
புதிதாய் கோரிக்கை வைத்து
என் மெளனம் கலைப்பாய் நீ...
முதல்தேதி சம்பளத்தில் அத்தனைக்கும்
பட்ஜெட் போட்டு பற்றாக்குறையில்
பரிதவிப்பேன் நான்...
ஆறுதல் சொல்லியபடியாய்
என் மெளனம் கலைப்பாய் நீ...
ஆனால் நமக்கிடையேயான
சின்னச் சின்ன சண்டைகளில் மட்டும்
எப்படி எதிர்பார்க்கின்றாய்?
நமக்கான மெளனத்தை நான்தான் முதலில்
கலைக்க வேண்டுமென்று...

எஸ்.ஆர்.கே. நந்தன்.
இராஜபாளையம்,
செல்லிப்பேசி

கவிதை 13 க.சமுத்திரம்.  


தாயே! தாய்த்திருநாடே!
தமிழே! தமிழனங்கே!! நலமா!
நலமில்லை நாங்கள்!!!
கொத்துக் கொத்தாய்
குழந்தைகள்செத்து மடிந்த சேதி தெரியுமா?
குண்டு மழையில் எஞ்சியபேரின்கூக்குரல் கேக்கிறதா?

ராஜிவ் மரணம் ராஜதந்திரத்தின் சருக்கல்...
தனி நபர் கொலையில் கொள்கை மாற்றம் ஏற்படாது.,
மன்னிப்பு இல்லையா?....

பாரதமே...பாராமுகம் எத்தனை நாளைக்கு?
இந்தியாவே...இதயக்கதவு எப்போது திறக்கும்?
தமிழகமே...
தாயிருந்தும் நாங்கள் அனாதைகளா?
இது யுத்தபூமியின்
புலம்பலில்லைதாயிடம் சேயின் பாசக்குரல்...

பாதையைடத்து பட்டினிபோட்டு பணிய வைக்க
சிங்களம் துடிக்கிறது...
எங்கள் கடைசி நபரின் கடைசி லட்சியமும்
சுதந்தரத்தைச் சுவாசிக்கவே...
எங்கள் மண்ணின் அருகம்புல்கூட கருகிச்சாகுமே
தவிர அடிமை மண்ணில் முளைக்காது...

விடியலுக்காக
கதிரவனைக் கட்டியிழுத்து வரவே
வளைக் கரமும் துப்பாக்கி தூக்குகிறது...
இசையும், நாட்டியமும், பாட்டும்,
கூத்தும், காதலும்,
கவிதையும்கொஞ்சம் மிச்சமிருக்கிறது...
கவிதை எழுத பேனா
தேடினால்எல்லா அலமாரிகளிலும் துப்பாக்கிகளே...
பிஞ்சுளே ஓவியமாக யுத்தகாட்சியையே வரைய...
ரோஜாக்களும், மல்லிகைகளும் ஏவுகணைகளை இயக்க...
அரும்பு மீசைகள் பீரங்கிகளை முடுக்க...
யுத்தமே வாழ்வாய்....வாழ்வே யுத்தமாய்....
நாடித் துடிப்புகளில் எப்போதுமே குண்டுச் சத்தமாய்
வாழும் எங்களுக்குதாயே...
தமிழே...
தமிழனங்கே...
மன்னிப்பே இல்லையா?

க.சமுத்திரம். செல்லிடப்பேசி +919940919766

கவிதை 12 - பா.முருகேசன்  


தலைவர்கள்

எலிகளுக்குப் பயிற்சி
இன்னும் சிறப்பாக செயல்பட...
எறும்புகளுக்குப் பயிற்சி
இன்னும் விரைவாக செயல்பட...
காகங்களுக்குப் பயிற்சி
கூட்டுறவுத் திறன் மேம்பட...

பயிற்றுவிக்க மட்டுமே
கற்றுக்கொண்ட
இந்தியத் தலைவர்கள்
நாங்கள்?!

- பா.முருகேசன் -

கவிதை 11 - ஓவியர் கல்யாணசுந்தரம்  

படைத்தல்

மண்ணுக்குள் புதைந்தவன்
மறுபடி எழுந்தான்?
வரிசையில் நின்றான்
வாக்களித்தான்!

உயிரோடிருந்தவன்
ஒதுக்கப்பட்டான்?

ஓங்காரக் கூச்சலிட்டனர்!
அரசியல் வியாபாரிகள்!
பூலோகத்தில்
பொதுத் தேர்தல்!


- ஓவியர் கல்யாணசுந்தரம் -

கவிதை 10 - இலக்கிய ராஜா  

தீப்பெட்டி

உள்ளே
நெருப்பு விரல்கள்
நெருங்கித் தூங்குகின்றன!

அக்கினி பிரசவங்கள்
அமைதியாய் அடைகாக்கின்றன!

கனல் பிரசுரங்கள்
வெளியீட்டு விழாவிற்கு
விழாவெடுத்திருக்கின்றன!

வெளிச்சப் புள்ளிகள்
வெகுளியாய் முடங்கிக் கிடக்கின்றன!

தற்கொலைப் படைகள்
தயாராய் தயங்கி நிற்கின்றன!

ஒளிக்காடு வெளிவராது
தூளியிட்டுத் தவமிருக்கின்றன!

தீக்கோலங்களின்
ஆரம்பப் புள்ளிகள்
ஆர்ப்பாட்டமின்றி
கந்தகத் தேரின்
ஆரக்கால்கள் சுழலாமல்!

சிக்கிமுக்கிக் கற்களின்
சிக்கன வடிவம்
வாமன அவதாரம்!!

- இலக்கிய ராஜா -

கவிதை 9 - கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி  

அணைகள் சிறைகளா?

உற்சாக துள்ளலுக்கு
ஊறு வந்ததாய்
உறுத்தலோடு நீ
உடைப்பெடுக்கத் தேடுகிறாய்...

சுதந்திரம் சிதைவதாய்
மதகுகளை மன்றாடி
பின்புத்தியால் முறைத்து
அடித்துப் பார்க்கிறாய்...

சிறுசிறு கசிவுகளாய்
நலம் தரா
பிரவாக கனவோடு
முண்டி முயற்சிக்கிறாய்...

எல்லாம் சரிதான்

உருப்படாமல் உன்னை
உருக்குலைக்கக் காத்திருக்கும்
உப்புக்கடல் உணர்வாயா?
நன்னீராளே!!


- கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி -

கவிதை 8 - கனிமொழி கருப்பசாமி  

இன்னும் பாமரனாய்...

வான் முட்டும் மலைகளையும்
பறந்து கடக்கிறோம்!

பயமுறுத்தும் ஆழ்கடலையும்
நீந்திக் கடக்கிறோம்!

பூமிப் பந்தில் யார் எங்கிருப்பினும்
நொடியில் பேசி மகிழ்கிறோம்!

நோய் பிடித்த உடல் உறுப்பை
வெட்டி எறிந்து புது உடையாய்
வேறொன்றை மாற்றிக் கொள்கிறோம்!

விட்டுப் போகும் உயிரை
எட்டிப் பிடித்து
கட்டிப் போடுகிறோம்!

ஆண் பெண் உறவின்றி
உயிரினத்தை உருவாக்கி
அறிவில் ஆண்டவனை
தொட்டு விட்டோம்!

ஆனால்...

இன்னும் ஏழையின்
வயிற்றில் பற்றி எரியும்
பசி நெருப்பை
அணைத்திட வழி தெரியாது
பாமரனாய் விழிக்கின்றோம்!!

- கனிமொழி கருப்பசாமி-

கவிதை 7 - பாண்டூ  

கல்யாணம் என்பது

பூவுக்கும் நாறுக்கும் போடப்படும் முடிச்சு...

இதை உணர்த்திடத் தானே மாலை உருவாச்சு...

விறைப்பாய் நிற்கும் நாறுக்கு எப்போதுமே ஒரு முறுக்கு...

நல்வாசனை தந்து வந்தாலும் இங்கு

பூவின் கழுத்துக்குத் தான் சுருக்கு...

- பாண்டூ -

கவிதை 6 கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி  

நான் உயிர்....
நீ மெய்....
எப்போது தமிழாவோம்....

கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி

கவிதை 5 ஜெ. செண்பகராஜன்  

உலகிலேயே சிறந்த கவிதை
குழந்தையின் கிறுக்கல்கள்...
ஜெ. செண்பகராஜன், விருதுநகர்.

கவிதை 4 ஜெ. செண்பகராஜன்  

கழிப்பறை இல்லாத கிராமங்களிலும்
வீடு தோறும் உள்ளது...
'தொலைக்காட்சி பெட்டி'


-ஜெ. செண்பகராஜன், விருதுநகர்.-

கவிதை 3 யுவபாரதி  

பசித்திருந்த மரங்களின் வேர்க்காலில்
வார்க்கிறேன் நீரை....
புசித்த சில முள் மரங்கள்
கிழித்த காயம் வலித்தாலும்
வார்க்கிறேன் நீரை....


-யுவபாரதி-

கவிதை 2 யுவபாரதி  

அள்ளி தெளித்தது வானம்...
சேறு ஆனது மண்...
சிரித்தன வயல்கள்...

-யுவபாரதி -

தமிழில் கவிதை படிக்க வாங்க  


காலூன்றா பருவத்திலே
கண்ணின் இமையாய்
"தாயின் கைகள்"


-யுவபாரதி-