கவிதை 11 - ஓவியர் கல்யாணசுந்தரம்
படைத்தல்
மண்ணுக்குள் புதைந்தவன்
மறுபடி எழுந்தான்?
வரிசையில் நின்றான்
வாக்களித்தான்!
உயிரோடிருந்தவன்
ஒதுக்கப்பட்டான்?
ஓங்காரக் கூச்சலிட்டனர்!
அரசியல் வியாபாரிகள்!
பூலோகத்தில்
பொதுத் தேர்தல்!
- ஓவியர் கல்யாணசுந்தரம் -
by யுவபாரதி
கவிதை 10 - இலக்கிய ராஜா
தீப்பெட்டி
உள்ளே
நெருப்பு விரல்கள்
நெருங்கித் தூங்குகின்றன!
அக்கினி பிரசவங்கள்
அமைதியாய் அடைகாக்கின்றன!
கனல் பிரசுரங்கள்
வெளியீட்டு விழாவிற்கு
விழாவெடுத்திருக்கின்றன!
வெளிச்சப் புள்ளிகள்
வெகுளியாய் முடங்கிக் கிடக்கின்றன!
தற்கொலைப் படைகள்
தயாராய் தயங்கி நிற்கின்றன!
ஒளிக்காடு வெளிவராது
தூளியிட்டுத் தவமிருக்கின்றன!
தீக்கோலங்களின்
ஆரம்பப் புள்ளிகள்
ஆர்ப்பாட்டமின்றி
கந்தகத் தேரின்
ஆரக்கால்கள் சுழலாமல்!
சிக்கிமுக்கிக் கற்களின்
சிக்கன வடிவம்
வாமன அவதாரம்!!
- இலக்கிய ராஜா -
by யுவபாரதி
கவிதை 9 - கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி
அணைகள் சிறைகளா?
உற்சாக துள்ளலுக்கு
ஊறு வந்ததாய்
உறுத்தலோடு நீ
உடைப்பெடுக்கத் தேடுகிறாய்...
சுதந்திரம் சிதைவதாய்
மதகுகளை மன்றாடி
பின்புத்தியால் முறைத்து
அடித்துப் பார்க்கிறாய்...
சிறுசிறு கசிவுகளாய்
நலம் தரா
பிரவாக கனவோடு
முண்டி முயற்சிக்கிறாய்...
எல்லாம் சரிதான்
உருப்படாமல் உன்னை
உருக்குலைக்கக் காத்திருக்கும்
உப்புக்கடல் உணர்வாயா?
நன்னீராளே!!
- கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி -
by யுவபாரதி
கவிதை 8 - கனிமொழி கருப்பசாமி
இன்னும் பாமரனாய்...
வான் முட்டும் மலைகளையும்
பறந்து கடக்கிறோம்!
பயமுறுத்தும் ஆழ்கடலையும்
நீந்திக் கடக்கிறோம்!
பூமிப் பந்தில் யார் எங்கிருப்பினும்
நொடியில் பேசி மகிழ்கிறோம்!
நோய் பிடித்த உடல் உறுப்பை
வெட்டி எறிந்து புது உடையாய்
வேறொன்றை மாற்றிக் கொள்கிறோம்!
விட்டுப் போகும் உயிரை
எட்டிப் பிடித்து
கட்டிப் போடுகிறோம்!
ஆண் பெண் உறவின்றி
உயிரினத்தை உருவாக்கி
அறிவில் ஆண்டவனை
தொட்டு விட்டோம்!
ஆனால்...
இன்னும் ஏழையின்
வயிற்றில் பற்றி எரியும்
பசி நெருப்பை
அணைத்திட வழி தெரியாது
பாமரனாய் விழிக்கின்றோம்!!
- கனிமொழி கருப்பசாமி-
by யுவபாரதி
கவிதை 7 - பாண்டூ
கல்யாணம் என்பது
பூவுக்கும் நாறுக்கும் போடப்படும் முடிச்சு...
இதை உணர்த்திடத் தானே மாலை உருவாச்சு...
விறைப்பாய் நிற்கும் நாறுக்கு எப்போதுமே ஒரு முறுக்கு...
நல்வாசனை தந்து வந்தாலும் இங்கு
பூவின் கழுத்துக்குத் தான் சுருக்கு...
- பாண்டூ -
by யுவபாரதி
கவிதை 6 கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி
நான் உயிர்....
நீ மெய்....
எப்போது தமிழாவோம்....
கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி
by யுவபாரதி