கவிதை 15 - எஸ்.ஆர்.கே. நந்தன்
குழந்தைகளோடு வேடிக்கை பார்த்து
வாசலில் அமர்ந்திருப்பேன் நான்...
கடைக்குச் சென்று ஏதேனும்
வாங்கி வரச் சொல்லி
என் மெளனம் கலைப்பாய் நீ....
பரபரப்பான அலுவலகம் முடிந்து
அமைதியாய் வீடு திரும்புவேன் நான்...
மத்தியான உணவின் பக்குவம் கேட்டு
என் மெளனம் கலைப்பாய் நீ...
மாத இறுதி வெள்ளிக்கிழமையில்
ஆலயம் சென்று பிரகாரம் சுற்றி
முன் மண்டபம் அமர்வேன் நான்...
புதிதாய் கோரிக்கை வைத்து
என் மெளனம் கலைப்பாய் நீ...
முதல்தேதி சம்பளத்தில் அத்தனைக்கும்
பட்ஜெட் போட்டு பற்றாக்குறையில்
பரிதவிப்பேன் நான்...
ஆறுதல் சொல்லியபடியாய்
என் மெளனம் கலைப்பாய் நீ...
ஆனால் நமக்கிடையேயான
சின்னச் சின்ன சண்டைகளில் மட்டும்
எப்படி எதிர்பார்க்கின்றாய்?
நமக்கான மெளனத்தை நான்தான் முதலில்
கலைக்க வேண்டுமென்று...
எஸ்.ஆர்.கே. நந்தன்.
இராஜபாளையம்,
செல்லிப்பேசி